திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஐந்தாம் திருமுறை |
5.89 தனி - திருக்குறுந்தொகை |
ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம்
ஒன்று கீளுமை யோடு முடுத்தது
ஒன்று வெண்டலை யேந்தியெம் உள்ளத்தே
ஒன்றி நின்றங் குறையும் ஒருவனே.
|
1 |
இரண்டு மாமவர்க் குள்ளன செய்தொழில்
இரண்டு மாமவர்க் குள்ளன கோலங்கள்
இரண்டு மில்லிள மானெமை யாளுகந்
திரண்டு போதுமென் சிந்தையுள் வைகுமே.
|
2 |
மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில்
மூன்று மாயின மூவிலைச் சூலத்தன்
மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்
மூன்று போதுமென் சிந்தையுள் மூழ்குமே.
|
3 |
நாலின் மேன்முகஞ் செற்றது மன்னிழல்
நாலு நன்குணர்ந் திட்டது மின்பமாம்
நாலு வேதஞ் சரித்தது நன்னெறி
நாலு போலெம் அகத்துறை நாதனே.
|
4 |
அஞ்சு மஞ்சுமோ ராடி யரைமிசை
அஞ்சு போலரை யார்த்ததின் றத்துவம்
அஞ்சு மஞ்சுமோ ரோரைஞ்சு மாயவன்
அஞ்சு மாமெம் அகத்துறை ஆதியே.
|
5 |
ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன்
ஆறு சூடிய அண்ட முதல்வனார்
ஆறு கூர்மையர்க் கச்சம யப்பொருள்
ஆறு போலெம் அகத்துறை ஆதியே.
|
6 |
ஏழு மாமலை ஏழ்பொழில் சூழ்கடல்
ஏழு போற்றுமி ராவணன் கைந்நரம்
பேழு கேட்டருள் செய்தவன் பொற்கழல்
ஏழுஞ் சூழடி யேன்மனத் துள்ளவே.
|
7 |
எட்டு மூர்த்தியாய் நின்றய லுந்தொழில்
எட்டு வான்குணத் தீசனெம் மான்றனை
எட்டு மூர்த்தியு மெம்மிறை யெம்முளே
எட்டு மூர்த்தியு மெம்மு ளொடுங்குமே.
|
8 |
ஒன்ப தொன்பதி யானை யொளிகளி
றொன்ப தொன்பது பல்கணஞ் சூழவே
ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை
ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமே.
|
9 |
பத்து நூறவன் வெங்கண்வெள் ளேற்றண்ணல்
பத்து நூறவன் பல்சடை தோள்மிசை
பத்தி யாமில மாதலின் ஞானத்தாற்
பத்தி யானிடங் கொண்டது பள்ளியே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |
திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஐந்தாம் திருமுறை |
5.90 தனி - திருக்குறுந்தொகை |
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
|
1 |
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
|
2 |
ஆளா காராளா னாரை அடைந்துய்யார்
மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
(*)தோளா தசுரை யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.
(*) தோளாத சுரையென்பது துவாரமிடாத சுரைக்காய்.
|
3 |
நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.
|
4 |
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.
|
5 |
குறிக ளுமடை யாளமுங் கோயிலும்
நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியி லீர்மன மென்கொல் புகாததே.
|
6 |
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.
|
7 |
எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.
|
8 |
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்ப ரவர்தம்மை நாணியே.
|
9 |
விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |
திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஐந்தாம் திருமுறை |
5.91 தனி - திருக்குறுந்தொகை |
ஏயி லானையெ னிச்சை யகம்படிக்
கோயி லானைக் குணப்பெருங் குன்றினை
வாயி லானை மனோன்மணி யைப்பெற்ற
தாயி லானைத் தழுவுமென் ஆவியே.
|
1 |
முன்னை ஞான முதற்றனி வித்தினைப்
பின்னை ஞானப் பிறங்கு சடையனை
என்னை ஞானத் திருளறுத் தாண்டவன்
தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே.
|
2 |
ஞானத் தாற்றொழு வார்சில ஞானிகள்
ஞானத் தாற்றொழு வேனுனை நானலேன்
ஞானத் தாற்றொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாயுனை நானுந் தொழுவனே.
|
3 |
புழுவுக் குங்குணம் நான்கெனக் கும்மதே
புழுவுக் கிங்கெனக் குள்ளபொல் லாங்கில்லை
புழுவி னுங்கடையேன்புனி தன்றமர்
குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே.
|
4 |
மலையே வந்து விழினும் மனிதர்காள்
நிலையி னின்று கலங்கப் பெறுதிரேல்
தலைவ னாகிய ஈசன் றமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே.
|
5 |
கற்றுக் கொள்வன வாயுள நாவுள
இட்டுக் கொள்வன பூவுள நீருள
கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்
எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.
|
6 |
மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன்
கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி
இனிது சாலவும் ஏசற் றவர்கட்கே.
|
7 |
என்னை யேதும் அறிந்திலன் எம்பிரான்
தன்னை நானுமு னேது மறிந்திலேன்
என்னைத் தன்னடி யானென் றறிதலுந்
தன்னை நானும் பிரானென் றறிந்தெனே.
|
8 |
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
9 |
தெள்ளத் தேறித் தெளிந்துதித் திப்பதோர்
உள்ளத் தேறல் அமுத ஒளிவெளி
கள்ளத் தேன்கடி யேன்கவ லைக்கடல்
வெள்ளத் தேனுக்கெவ் வாறு விளைந்ததே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |